முருகனடியார்களே ..
நோர்வேவாழ் தமிழர்களுக்கெல்லாம் பெருமையளிக்கும் வண்ணம் தமிழ்த் தெய்வமான முருகனுக்கு ஓஸ்லோ மாநகர் றொம்மனில் ஆகம விதிப்படி அழகானதோர் ஆலயம் நிர்மாணிக்கபட்டு வருவதை யாவரும் அறிவீர்கள். ஆலயத்தால் புதிய கட்டிடத்திற்கென சேமிக்கப்பட்டநிதி மற்றும் அடியார்களின் நிதிப்பங்களிப்புகள் மூலம் கட்டுமானப்பணிகளில் 1ஆம் 2ஆம் கட்டவேலைகள் பூர்த்தியடைந்து விட்டதை மகிழ்வோடு அறியத்தருகிறோம்.
இறுதிக்கட்ட வேலைகள்
இவ்வொப்பந்தத்தில் செய்யப்படவுள்ள வேலைகள் பின்வருமாறு:
- ஆலயத்தை வெப்பமூட்டும் குளிரூட்டும் வசதிகள் (ventilasjon med varme/kjøling), மின்னிணைப்பு, சுகாதார வசதிகள்
- கீழ் மண்டபத்தை திருமணஇ மற்றும் இந்துசமய கொண்டாட்டங்கள், விழாக்கள் நடாத்துவதற்கு ஏற்றமாதிரி சமையலறையுடன் முற்றாகப் பூர்த்தி செய்தல்
- வாகன தரிப்பிடங்களை அமைத்தல்
- மற்றும் ஆலய வெளிவீதியை அமைத்தல்.
கட்டிட நிறுவனம் இவ்வேலைகளை 2020 juni மாதத்தில் பூர்த்தி செய்வார்கள். இவ்வேலைகள் முடிவடைந்தவுடன் ஆலய கட்டிடத்தை பாவிப்பதற்கான அனுமதியைப் பெறலாம்.
2020ஆம் ஆண்டு ஆவணி மாதத்திற்குள் நாம் இன்று ஆலயம் அமைந்துள்ள Ammerud இல் இருந்து வெளியேற வேண்டும். ஆலயத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்கான ஒப்பந்தமானது 27,4 மில்லியன் குரோணர்களாகும். இதில் 20 மில்லியன் வங்கிக்கடனாகும், எம்மிடம் 6இ4 மில்லியன் குரோணர்கள் கைவசமுள்ளது (அடியார்களின் நன்கொடையும் அடியார்களிடமிருந்து பெற்றுக்கொண்ட குறுகிய காலக் கடனும்).
இந்திய சிற்பிகளால் ஆலய மூலஸ்தான வேலைகள் மார்கழி மாதத்தில் சிறப்பாகக் கட்டி முடிக்கப்படுள்ளது. விநாயகர், அம்மன், சிவன், பார்வதி சந்நிதிகள் விமானம் கட்டுவதற்கான பணம் எம்மிடம் தற்போது கைவசமில்லை. ஆனால் அடியார்கள் நிலமை அறிந்து உதவி புரிவார்கள் என்ற நம்பிக்கையில் விநாயகர் அம்மன சந்நிதியை கருங்கல்லில் செதுக்குவதற்கு முற்பணம் கொடுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலமையில் Ammerud இல் உள்ள விக்கிரகங்களை புதிய ஆலயத்தில்இ 2020 இல் ஆலய வருடாந்த திருவிழா முடிவடைந்த பின்புதான் பிரதிஷ்டை செய்யலாம் (பாலஸ்தானம் செய்தல்). நாம் இப்படியோர் இக்கட்டான சூழ்நிலையில் தான் அடியார்களாகிய உங்களிடம் நிதியுதவி புரியுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கும்பாபிசேகம் முடிவடந்த பின்னர் 12 வருடங்களுக்கு பிரதிஸ்டை செய்யப்பட்ட விக்கிரகங்களின் சந்நிதியிற்கு மாற்றங்கள்/கட்டட வேலைகள் செய்யக்கூடாது என ஓர் ஜதீகம் உள்ளது. இக்காரணத்தால் தான் ஆலயத்தை முற்று முழுதாக சிற்பவேலைகளுடன் கும்பாபிசேகம் செய்ய முன்னர் கட்டி முடித்திட விரும்புகிறோம். ஆலயத்தின் உட்பகுதியிலுள்ள எல்லா சிற்பவேலைகளுக்கும் மற்றும் விமானனத்தயும் (மூலஸ்தானத்தில் மேலுள்ள கோபுரம், 18 அடி உயரம்) கருங்கல்லினால் அமைப்ப்பதற்கு இன்னும் எமக்கு கிட்டத்தட்ட 6 மில்லியன் குரோணர்கள் தேவையாகவுள்ளது.
புதிய ஆலயமானது புலம்பெயர்ந்த எமது வருங்கால சந்ததியினருக்காக நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய சொத்து மட்டுமல்ல சமய, கலை, கலாச்சாரங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
«மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்»
இங்ஙனம்
கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்